சங்கராபுரம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
சங்கராபுரம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா செம்பராம்பட்டு காலனி பகுதியை சேர்ந்த 8 வயதுடைய சிறுமி அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 2011-ம் ஆண்டு 3-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 12.3.2011 அன்று சிறுமி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த உறவினரான அய்யாங்குட்டி மகன் இளையராஜா (வயது 37) என்ற கூலித்தொழிலாளி, அந்த சிறுமியிடம் 10 ரூபாய் கொடுத்து 2 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கிக்கொண்டு மீதி பணத்தை கொண்டு வரும்படி கூறினார். அதன்படி அந்த சிறுமி, அருகில் உள்ள கடைக்கு சென்று மிட்டாய் வாங்கிக்கொண்டு மீதி பணத்தை இளையராஜாவிடம் கொடுக்க வந்தாள். அந்த சமயத்தில் அங்குள்ள முட்புதருக்கு சிறுமியை அழைத்துச்சென்று அவளை இளையராஜா பாலியல் பலாத்காரம் செய்தார்.
தீர்ப்பு
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட இளையராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இந்த அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அதோடு ரூ.3 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இளையராஜா, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.
Related Tags :
Next Story