ராமேசுவரத்தில் இருந்து 4 படகுகளில் 100 பேர் பயணம்


ராமேசுவரத்தில் இருந்து  4 படகுகளில் 100 பேர் பயணம்
x
தினத்தந்தி 10 March 2022 10:58 PM IST (Updated: 10 March 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு 100 பேர் செல்கின்றனர்

ராமேசுவரம், 
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு ராமேசுவரத்தில் இருந்து இன்று 4 படகுகளில் 100 பேர் செல்கின்றனர். 
கச்சத்தீவு ஆலய திருவிழா 
ராமேசுவரம் அருகே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.
இந்த ஆலய திருவிழா இன்றும், நாளையும் (வெள்ளி, சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. 
இந்த திருவிழாவுக்கு ராமேசுவரத்தில் இருந்து இன்று காலை 4 படகுகளில் மொத்தம் 100 பேர் மட்டுமே செல்கின்றனர். திருவிழாவிற்கு செல்லும் நபர்கள், படகுகளை, சுங்கத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர சோதனை செய்து, அதன்பின்னரே அனுமதிக்கின்றனர். 
கச்சத்தீவு திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு மண்டபம் முதல் ராமேசுவரம், தனுஷ்கோடி வரையிலான இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 3 கப்பல்களும், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பலும் நேற்று முதலே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. 
இதை தவிர உச்சிப்புளி கடற்படை விமான தளத்தை சேர்ந்த ஆள் இல்லாத விமானம், ஹெலிகாப்டரும் தீவிரமான ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
100 பேர் அனுமதி 
திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணி அளவில் அந்தோணியார் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்படுகின்றது. தொடர்ந்து சிலுவை பாதை திருப்பலியும், இரவில் அந்தோணியார் தேர் பவனியும் நடக்கிறது. 
விழாவின் 2-வது நாளான நாளை காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். பின்னர் 9 மணியுடன் திருப்பலி முடிந்து கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகின்றது. 
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் 50 பேர் என‌ மொத்தம் 100 பேர் மட்டும் திருவிழாவிற்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story