நகை கொள்ளையில் கொள்ளையர்களுக்கு உதவிய தொழிலாளி கைது
திருப்பூரில் நகை அடகு கடையில் 3¼ கிலோ நகை கொள்ளை நடந்த சம்பவத்தில் கொள்ளையர்களுக்கு உதவிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்
திருப்பூரில் நகை அடகு கடையில் 3¼ கிலோ நகை கொள்ளை நடந்த சம்பவத்தில் கொள்ளையர்களுக்கு உதவிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3¼ கிலோ நகை கொள்ளை
திருப்பூர் யூனியன் மில் ரோடு கே.பி.என்.காலனி 3-வது வீதியில் ஜெயக்குமார் (வயது 49) என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். கடந்த 4-ந் தேதி அதிகாலை இவருடைய நகை அடகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் 3¼ கிலோ தங்க நகைகள், 28 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.15 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பியது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் 4 பேர் ரெயில் மூலமாக திருப்பூரில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து பீகார் செல்லும் ரெயிலில் தப்பியது தெரியவந்தது. தனிப்படையினர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே போலீசார் துணையுடன் மராட்டிய மாநிலம் பல்லார்ஷா ரெயில் நிலையத்தில் வைத்து கொள்ளையர்கள் 4 பேரையும் பிடித்து அவர்களிடம் இருந்து 3¼ கிலோ தங்க நகை, 28 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.15 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஒருவர் கைது
இதுதொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த மகதப் ஆலம் (37), பத்ருல் (20), முகம்மது சுபான் (30), திலகஸ் (20) ஆகியோரை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் விசாரணை முடிந்ததை தொடர்ந்து அவர்களை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு உதவியதாக திருப்பூர் லட்சுமி நகரில் வசித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த முர்த்தாஜா (37) என்பவரை வடக்கு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இவர் திருப்பூர் பி.என். ரோட்டில் காஜா, பட்டன் விற்பனை செய்யும் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மகதப் ஆலம் திருப்பூர் வந்து வெல்டிங் தொழிலாளியாக இருந்துள்ளார். அவருக்கு முர்த்தாஜா வாடகைக்கு அறை எடுத்து கொடுத்து உதவியுள்ளார். மகதப் ஆலம், இங்குள்ள நகை கடைகளை நோட்டம் பார்த்து அதன் பின்னரே டெல்லி சென்று தனது கூட்டாளிகளை திருப்பூர் அழைத்து வந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முர்த்தாஜா, திட்டம் வகுத்து கொடுத்து உதவியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையர்களுக்கு உதவிய முர்த்தாஜாவை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story