தங்க சங்கிலி பறித்த வழக்கில் 2 வாலிபர்கள் சிக்கினர்
உத்தமபாளையம், பெரியகுளம் பகுதிகளில் தங்க சங்கிலி பறித்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியை சேர்ந்தவர் சந்திரா (வயது 70). இவர், கடந்த மாதம் 22-ந்தேதி வீட்டின் அருகே நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், அவர் கழுத்தில் இருந்த 4 பவுன் சங்கிலியை பறித்து சென்றார். இதேபோல் பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரம் வரதராஜ நகரை சேர்ந்த செல்வி (32) என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து செல்வியின் கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.
இதுகுறித்து ஜெயமங்கலம் மற்றும் உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில் குற்றவாளிகளை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் திவான்மைதீன், சதீஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று உத்தமபாளையம் பி.டிஆர்.காலனியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுரையை சேர்ந்த பாண்டியன் (28), சென்னை தாம்பரத்தை சேர்ந்த லோகநாதன் (28) என்பதும், உத்தமபாளையம், ஜெயமங்கலத்தில் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 6 பவுன் சங்கிலிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story