லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார
தொண்டி,
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
பட்டா மாறுதல்
ராமநாதபுரம் அருகே உள்ள நொச்சிவயல் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 26). இவர் கடந்த 2 ஆண்டுகளாக திருவாடானை தாலுகா புல்லூர் குரூப் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
இவர் புல்லூர் அருகே வெள்ளையபுரத்தில் தனியாக அறை எடுத்து அலுவலக பணிகளை செய்து வந்தார்.
இந்தநிலையில் நாவலூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான மணி என்பவர், ஒரு நிலத்திற்கு பட்டா மாறுதல் கேட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவை கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், மேல் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார். இது தொடர்பாக மணி, கிராம நிர்வாக அலுவலர் சதீசை பல முறை நேரில் சந்தித்து பட்டா மாறுதல் மனுவை பரிந்துரைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுத்தால்தான் அந்த பணியை செய்ய முடியும் என கிராம நிர்வாக அலுவலர் கூறினாராம்.
கைது
இதுகுறித்து மணி, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு உன்னி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் தலைமையிலான போலீசார், ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை மணியிடம் கொடுத்துள்ளனர். அதை அவர், சதீசிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் சதீசை கையும், களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story