புதிய திருப்பூரை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்
புதிய திருப்பூரை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று உலக மகளிர் தின விழாவில் மேயர் தினேஷ்குமார் பேசினார்.
திருப்பூர்
புதிய திருப்பூரை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று உலக மகளிர் தின விழாவில் மேயர் தினேஷ்குமார் பேசினார்.
உலக மகளிர் தின விழா
திருப்பூர் மாநகராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா திருப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார். துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். விழாவை மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரால் பெண்களின் நலனும், உரிமையும் காக்கப்பட்டு வருகிறது. பல்வேறு காலக்கட்டங்களில் பங்கேற்ற முக்கியமான பொறுப்பு பெண்களிடம் உள்ளது. உங்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேற வேண்டும் என்று அரசு பல திட்டங்களை செய்து வருகிறது. திருப்பூர் மாநகராட்சியை ஒரு புதிய மாநகராட்சியாக நாம் கட்டமைக்க வேண்டும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு புதிய நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.
புதிய திருப்பூரை உருவாக்குவோம்
திருப்பூரின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும், தூய்மைக்கும், சுகாதாரத்துக்கும் திருப்பூர் மக்களின் நலனுக்கும் உங்களுடைய பங்களிப்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சுகாதார பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், மாநகராட்சி ஊழியர்களின் வளர்ச்சி, பாதுகாப்பு, முன்னேற்றத்துக்கு நிர்வாகம் முழு பங்கு வகிக்கும். துப்புரவு பணியாளர்களின் பணி மிகவும் இன்றியமையாதது. வரும் நாட்களில் புதிய திருப்பூரை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். திருப்பூர் மாநகராட்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உங்களுக்காக மேயர் அலுவலக கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும். உங்களோடு நானும் சேர்ந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பெண் கவுன்சிலர்கள், பெண் அதிகாரிகள் சேர்ந்து கேக் வெட்டி மேயர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கினார்கள். விழாவில் அரசு வழக்கறிஞர்கள் பூமதி, ஜமீலா பானு, டாக்டர் வசந்தி பிரேமா, மாநகராட்சி அதிகாரி சவுதாமணி உள்ளிட்ட பெண் அதிகாரிகள் கவுரவிக்கப்பட்டனர். 1,700-க்கும் மேற்பட்ட பெண் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மேயர் தினேஷ்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.
இதில் மாநகராட்சி கவுன்சிலர் இல.பத்மநாபன், பொறியாளர் முகமது சபியுல்லா, செயற்பொறியாளர் திருமுருகன், உதவி ஆணையாளர்கள் சந்தான நாராயணன், செந்தில்குமார், தங்கவேல்ராஜன், கண்ணன், செல்வநாயகம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
தொடக்கப்பள்ளியில் ஆய்வு
முன்னதாக திருப்பூர் மாஸ்கோ நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என்று ஏற்கனவே பெற்றோர்கள் சேர்ந்து மேயரிடம் கோரிக்கை மனு கொடுத்த நிலையில் உடனடியாக அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை கேட்டறிந்து அவற்றை செய்து கொடுக்க மேயர் உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story