மேல்மலையனூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
மேல்மலையனூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா மேல்புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த 7 வயதுடைய சிறுமி கடந்த 2019-ம் ஆண்டில் அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்தாள். இவள் படித்து வரும் பள்ளியிலேயே சில இளைஞர்கள் டியூசன் எடுத்து வந்தனர். இதனால் சிறுமி, மாலையில் பள்ளி முடிந்ததும் டியூசன் முடித்துக்கொண்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 14.2.2019 அன்று இரவு 7 மணியளவில் சிறுமி, டியூசன் முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்தாள். அப்போது சிறுமியை பின்தொடர்ந்து வந்த மேல்புதுப்பட்டு வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியான பொன்னுராமன் மகன் பூபதி (வயது 24) என்பவர், சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவளை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுபற்றி பெற்றோரிடம் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை பூபதி மிரட்டினார்.
இதுகுறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் கூறினாள். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் இதுதொடர்பாக விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரவேல், குற்றம் சாட்டப்பட்ட பூபதிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.9 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பூபதி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.
Related Tags :
Next Story