வெங்காயம் அனுப்புவதாக கூறி வியாபாரியிடம் ரூ.2 லட்சம் மோசடி
வெங்காயம் அனுப்புவதாக கூறி வியாபாரியிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த வியாபாாியை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ்மோக்ரா (வயது 49). இவர் விழுப்புரத்தில் வெங்காயம், பூண்டு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 28.1.2022 அன்று இவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், தனது பெயர் வாசிம் என்றும், தான் வெங்காயத்தை மொத்தமாக விற்பனை செய்து வருவதாகவும், உங்களுக்கு தேவைப்பட்டால் வெங்காயத்தை மொத்தமாக தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய ராகேஷ்மோக்ரா, அந்த நபரிடம் 14 டன் வெங்காயத்தை ஆர்டர் செய்துள்ளார். அதற்கு முன்பணமாக ரூ.2 லட்சத்தை அந்த நபர் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு எண்ணுக்கு ராகேஷ்மோக்ரா தனது வங்கி கணக்கில் இருந்து அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த மர்ம நபர், ராகேஷ்மோக்ராவுக்கு வெங்காயம் அனுப்பாமல் பணத்தை ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.
இதுகுறித்து ராகேஷ்மோக்ரா, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story