கண்டாச்சிபுரம் அருகே பழ வியாபாரியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை


கண்டாச்சிபுரம் அருகே பழ வியாபாரியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 10 March 2022 11:37 PM IST (Updated: 10 March 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

கண்டாச்சிபுரம் அருகே பழ வியாபாரியை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 3 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா பழையகருவாட்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் ஜெயபால் (வயது 40). இவரும், இவருடைய தம்பி பன்னீர்செல்வமும் பெங்களூருவில் பழ வியாபாரம் செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காரணமாக பெங்களூருவில் இருந்து இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 8.5.2020 அன்று அதே கிராமத்தை சேர்ந்த துரைக்கண்ணு மகன் அன்பு (24), சின்னத்தம்பி மகன்கள் பாண்டியன் (26), ஆனந்தராஜ் (20), எட்டியான் மகன் கார்த்திகேயன் (26) மற்றும் 2 சிறுவர்கள் என 6 பேர் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச்சென்றுள்ளனர். இதை பார்த்த பன்னீர்செல்வம், அந்த 6 பேரிடமும் சென்று தட்டிக்கேட்டார். இதனால் அவர்கள் 6 பேரும், பன்னீர்செல்வத்திடம் தகராறு செய்தனர். உடனே அங்கு வந்த ஜெயபால், அந்த தகராறை விலக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அன்பு உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து ஜெயபாலை இரும்புக்கம்பி, உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஜெயபால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வாலிபருக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்த புகாரின்பேரில் அன்பு உள்ளிட்ட 6 பேர் மீதும் கண்டாச்சிபுரம் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். இதில் 2 சிறுவர்கள் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அன்பு, பாண்டியன், ஆனந்தராஜ், கார்த்திகேயன் ஆகிய 4 பேர் மீதான விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட அன்புக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், பாண்டியன், ஆனந்தராஜ், கார்த்திகேயன் ஆகிய 3 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.  இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்பிரமணியம் ஆஜரானார்.

Next Story