வெப்படையில் இருதரப்பினர் தகராறில் 6 பேர் கைது
வெப்படையில் இருதரப்பினர் தகராறில் 6 பேர் கைது
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே வெப்படையில் தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 35) என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் அடிக்கடி குடிபோதையில் வேலைக்கு வருவதும், மில்லில் தொழிலாளர்களுடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார் மில் தொழிலாளியான திருவண்ணாமலையை சேர்ந்த அருணாசலம் (25) என்பவருடன் தகராறு செய்து அவரை தாக்கியதாக தெரிகிறது.
அப்போது அருணாச்சலம் தனது நண்பர் ராம்குமாருக்கு போன் செய்து என்னை அடிக்கிறார்கள் வந்து உதவி செய் என்று கூறினார். அதன்பேரில் ராம்குமார் (28) நேரில் வந்து சதீஷ்குமாரிடம் ஏன் அருணாசலத்தை தாக்கினாய் என கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் மற்றும் வின்சென்ட் (25), ராஜதுரை (25), அய்யப்பன் (24), சக்தி முருகன் (38) ஆகிய 5 பேர் சேர்ந்து ராம்குமார், அருணாசலத்தை தாக்கினர். இதில் ராம்குமார் பலத்த காயம் அடைந்து பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ராம்குமார் வெப்படை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார், சக்தி முருகன், வின்சன்ட், ராமதுரை, அய்யப்பன் ஆகிய 5 பேரை கைது செய்தனர் மேலும் சதீஷ் குமார் கொடுத்த புகாரின்பேரில் அருணாசலத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story