வேப்பூரில் கிராம மக்கள் சாலை மறியல்
வாலிபரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி வேப்பூரில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பூர்,
வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் அபிசுந்தர்(வயது 17). இவர் நேற்று முன்தினம் அதே ஊரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பிணமாக மிதந்தார். அவரது உடலை கைப்பற்றிய வேப்பூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அபிசுந்தர் சாவில் சந்தேகம் இருப்பதாக பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று பகல் 11:30 மணியளவில் அபிசுந்தரின் உறவினர்கள் மற்றும் பூலாம்பாடி கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் வேப்பூர் பஸ் நிலையம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அபிசுந்தரின் உறவினர்கள் 4 பேர், தங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
கொலை செய்யப்பட்டதாக கூறி...
இதற்கிடையில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா நேரில் வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அபிசுந்தர் கொலை செய்யப்பட்டு உடல் கிணற்றில் வீசப்பட்டதாகவும், அவரை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் கூறினர். அதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இருப்பினும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.
அணிவகுத்த வாகனங்கள்
இது பற்றி தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார் ஆகியோர் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மதியம் 1.30 மணியளவில் கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. 10 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. போராட்டம் முடிந்ததும் போலீசார் வாகன போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த போராட்டத்தால் வேப்பூர் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story