அரசு ஆஸ்பத்திரி நர்சு உதவியாளர் மதுரை கோர்ட்டில் சாட்சியம்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி நர்சு உதவியாளர் மதுரை கோர்ட்டில் சாட்சியம் அளித்தார்.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சி.பி.ஐ. தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில், நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கின் சாட்சியான கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி நர்சு உதவியாளர் அருணாசல பெருமாள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். சாட்சியத்தின் போது, கோவில்பட்டி கிளை சிறையிலிருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு ஜெயராஜை அழைத்து வரும்போது உடல் முழுவதும் காயம் இருந்ததாகவும், போலீசார் தாக்கியதில், தான் காயம் அடைந்ததாக அவர் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் சிறுநீர் கழிக்க முடியாத அளவிற்கு காயம் இருந்ததால் செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தியதாகவும் அவர் சாட்சியம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற 15-ந் தேதி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, சிறையிலுள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story