ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரி தற்கொலை முயற்சி
விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை கொள்முதல் செய்ய 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர்.
இந்த நிலையில் விருத்தாசலம் அண்ணா நகரை சேர்ந்த வியாபாரியான ராதாகிருஷ்ணன் (வயது 43) என்பவர் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களுக்கு முறையாக பணப்பட்டுவாடா செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து ராதாகிருஷ்ணன் ஏலத்தில் பங்கெடுக்க கூடாது என ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகம் முன்பு நேற்று திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், காழ்ப்புணர்ச்சி காரணமாக சில அதிகாரிகள் தன்னை மிரட்டி வருகிறார்கள். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன் என்றார். அதற்கு மறுப்பு தெரிவித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் குமரகுருபரன் கூறுகையில், ராதாகிருஷ்ணன் விவசாயிகளுக்கு பணம் தராமல் இழுத்தடித்து வந்தார். தற்போது அவர் ரூ. 4 லட்சத்து 13 ஆயிரம் இன்னும் விவசாயிகளுக்கு பாக்கி தர வேண்டியுள்ளது. இதையடுத்து அந்த பணத்தை முழுவதும் கட்டியபின்பு ஏலத்தில் பங்கெடுக்குமாறு கூறினேன் என்றார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story