கோவை சிறையில் யுவராஜ் அடைப்பு


கோவை சிறையில் யுவராஜ் அடைப்பு
x
தினத்தந்தி 11 March 2022 1:43 AM IST (Updated: 11 March 2022 1:43 AM IST)
t-max-icont-min-icon

கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ், மதுரையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு திடீரென மாற்றப்பட்டார்.

மதுரை, 

கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ், மதுரையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு திடீரென மாற்றப்பட்டார்.

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளம் பகுதியில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தாா். அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 
இந்த வழக்கு, மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேர் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றும் நீதிபதி சம்பத்குமாா் தீர்ப்பளித்தார். அதன்படி யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ். சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகியோருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை சிறைக்கு திடீர் மாற்றம்

இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக யுவராஜை மட்டும் மதுரை மத்திய சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற நிர்வாகம் முடிவு செய்தது. இது குறித்து சிறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அவரை கோவை மத்திய சிறைக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இரவோடு இரவாக யுவராஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு தனி அறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக  அவருடன் தண்டனை பெற்று, மதுரை சிறையில் உள்ள மற்ற கைதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் இருந்த அறையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் அமைதியானார்கள். 

Next Story