தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாடாலூர்:
பங்குனி உத்திர திருவிழா
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் மலை மீதுள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து காலை 9 மணியளவில் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தினமும் இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமியை எழுந்தருள செய்து, வீதி உலா நடக்கிறது.
தேரோட்டம்
திருவிழாவின் 7-ம் நாளான வருகிற 16-ந் தேதி முருகன், வள்ளி மற்றும் தெய்வானை திருக்கல்யாணமும், 8-ம் நாளான 17-ந் தேதி ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தளி வீதி உலா வருதல் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 18-ந் தேதி மாலை 4 மணியளவில் தொடங்குகிறது. வீதிகளில் வலம் வரும் தேர் 19-ந் தேதி மாலை நிலையை வந்தடைகிறது.பெரும்பாலான கோவில்களில் தேரோட்டம் காலையில் மட்டுமே நடைபெறும். ஆனால், இங்கு முதல் நாள் மாலையில் தொடங்கி மறுநாள் மாலை வரை தேரோட்டம் நடைபெறுவது சிறப்பம்சமாகும். தேரோட்டத்தை முன்னிட்டு பெரம்பலூர், திருச்சி, துறையூர், அரியலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து செட்டிகுளத்திற்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயலதா, எழுத்தர் தண்டாணிதேசிகன் மற்றும் கோவில் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story