இரும்பு நிறுவன ஊழியர்களிடம் வருமான வரித்துறையினர் விசாரணை
சேலம் ரெயில் நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல் செய்தது தொடர்பாக வேலூரை சேர்ந்த தனியார் பழைய இரும்பு நிறுவன ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:-
சேலம் ரெயில் நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல் செய்தது தொடர்பாக வேலூரை சேர்ந்த தனியார் பழைய இரும்பு நிறுவன ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.20 லட்சம் பறிமுதல்
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கடந்த 8-ந் தேதி இரவு ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரெயில் நிலைய சுரங்கபாதையில் சந்தேகம்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் ரூ.20 லட்சத்தை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
வேலூரை சேர்ந்தவர்கள்
விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சஜீல் (வயது 24), பேரணாம்பட்டை சேர்ந்த உசேன் (22), சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த அருண்குமார் (33) என்பதும், இவர்களில் சஜீல், உசேன் ஆகியோர் வேலூரில் உள்ள ஒரு தனியார் பழைய இரும்பு வியாபார நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. சேலத்தை சேர்ந்த அருண்குமாரிடம் இருந்து பழைய இரும்பு பொருட்களை வாங்கி செல்ல ரூ.20 லட்சத்துடன் அவர்கள் வந்ததாக கூறப்படுகிறது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சேலம் வருமான வரித்துறை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வருமான வரித்துறையினர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்களிடம் ரூ.20 லட்சத்தையும், அதை எடுத்து வந்த சஜீல், உசேன் ஆகியோரையும் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
விசாரணை
இதையடுத்து பணத்துடன் சிக்கிய 2 பேரிடம் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்தும், ஏற்கனவே சேலம் வந்து பழைய இரும்பு பொருட்கள் வாங்கி சென்ற விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த ஓராண்டில் மட்டும் சேலத்திற்கு ரூ.1 கோடியே 23 லட்சத்தை முறைகேடாக எடுத்து வந்து பழைய இரும்பு பொருட்களை வாங்கி சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனால் வேலூரில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் பழைய இரும்பு வியாபார நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் பண பரிமாற்றம் செய்திருப்பதும், வரி ஏய்ப்பு செய்து தொழில் நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளரை சேலத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பவும் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ெதாடர்ந்து 2 ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story