4 நாட்களாக பஸ்சில் பயணம் செய்து தலைமறைவாக இருந்த வாலிபர்கள்
குமரி மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் மகனை கொன்று புதைத்த வாலிபர்கள் போலீசில் இருந்து தப்பிக்க 4 நாட்களாக பஸ்சிலேயே வலம் வந்து தலைமறைவாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாகர்கோவில்:-
குமரி மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் மகனை கொன்று புதைத்த வாலிபர்கள் போலீசில் இருந்து தப்பிக்க 4 நாட்களாக பஸ்சிலேயே வலம் வந்து தலைமறைவாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவர் கொலை
நாகர்கோவில் சீயோன் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 56). இவர் குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும், அயக்கோடு பஞ்சாயத்து தலைவராகவும் உள்ளார். இவருடைய மகன் லிபின் ராஜா (23), ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 4-ந் தேதி இரவு திடீரென மாயமானார். இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் லிபின் ராஜா கொலை செய்யப்பட்டு, நெல்லை மாவட்டம் பழவூர் தேசிய நெடுஞ்சாலை அருகே புதைக்கப்பட்டாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து பழவூர் போலீசார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட இடத்தில் தோண்டினர். அப்போது அங்கு மண்ணில் புதைத்து இருந்த லிபின் ராஜா உடல் மீட்கப்பட்டது. பின்னர் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
2 பேர் சரண்
குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக புதுக்குடியிருப்பை சேர்ந்த எபின் (27), ஸ்டீபன்ராஜ் (26) ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2-வது கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை வருகிற 14-ந் தேதி வரை ஜெயிலில் அடைக்கும்படியும், அதன்பிறகு வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படியும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக லிபின் ராஜா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சரணடைந்த 2 பேரும் வழுக்கம்பாறையில் வைத்து கூட்டாக சேர்ந்து அவரை கட்டையால் அடித்து கொலை செய்ததோடு, உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் எடுத்து சென்று பழவூரில் புதைத்த தகவல் வெளியானது.
பஸ்சில் சென்று தலைமறைவு
இதற்கிடையே கொலை செய்து உடலை புதைத்து விட்டு 2 பேரும் எங்கு சென்று தலைமறைவானார்கள்? என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது 2 பேரும் உடலை புதைத்ததும் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு பஸ்சில் ஏறியுள்ளனர். பின்னர் 4 நாட்களாக பஸ்சிலேேய பயணம் செய்துள்ளனர். சென்னை, திருச்சி, மதுரை, கோவை என பல ஊர்களுக்கு பஸ்சிலேேய சென்று தலைமறைவாக இருந்துள்ளனர்.
இதனையடுத்து எப்படியும் போலீசார் தங்களை பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் கோர்ட்டில் வந்து சரண் அடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் சரண் அடைந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story