புகை கூண்டு கோபுரத்தில் ஏறி,4 வாலிபர்கள் தற்கொலை மிரட்டல்
சூளகிரி அருகே, தனியார் தொழிற்சாலையில் புகை கூண்டு கோபுரத்தில் ஏறி,4 வாலிபர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
சூளகிரி:-
சூளகிரி அருகே குண்டு குறுக்கி என்ற இடத்தில் தனியார் கார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்த தொழிலாளர்களாக சேர்ந்த 15 பேருக்கு, கடந்த ஆண்டுடன் பணிக்காலம் முடிந்தது. இதனால் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மீண்டும் பணி வழங்கக்கோரி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க நிர்வாகம் மறுத்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் அந்த 15 பேரும் தொழிற்சாலைக்கு வந்தனர். இவர்களில் வாணியம்பாடியை சேர்ந்த விஜயகாந்த் (வயது 33), தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை சேர்ந்த வெங்கடேசன் (28), சூளகிரி அருகே மேடுபள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் (32), காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சத்யராஜ் (28) ஆகிய 4 பேரும் தொழிற்சாலையின் கேட் மீது ஏறி உள்ளே சென்றனர். மற்ற 11 பேரும் வெளியே நின்றனர்.
பின்னர் விஜயகாந்த் உள்பட 4 பேரும் அங்குள்ள 70 அடி உயர புகை கூண்டின் மீது ஏறி நின்று, தங்களுக்கு மீண்டும் வேலை வழங்காவிட்டால், புகை கூண்டு கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தனர். இதைக்கண்டு தொழிற்சாலை காவலாளிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் மேலும் இதுகுறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார், மைக் மூலம் பேசி அவர்களை கீழே இறங்குமாறும் வேலை குறித்து நிர்வாகத்திடம் பேசி முடிவெடுப்பதாகவும் கூறினர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் கீழே இறங்கினர். இதன் காரணமாக அங்கு சுமார் 4 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story