கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.1.16 கோடியில் கட்டப்பட்டுள்ள 3 கால்நடை மருந்தகங்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.1.16 கோடியில் கட்டப்பட்டுள்ள 3 கால்நடை மருந்தகங்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 11 March 2022 2:18 AM IST (Updated: 11 March 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 கால்நடை மருந்தகங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி
கால்நடை மருந்தகங்கள் 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பச்சிகானப்பள்ளி, பென்னங்கூர் மற்றும் தொட்டபேளூர் ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 கால்நடை மருந்தக கட்டிடங்கள் திறப்பு விழா பச்சிகானப்பள்ளியில் நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி, ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
இதில் மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 3 கால்நடை மருந்தக கட்டிடங்களை திறந்து வைத்து பேசினாா்.
அப்போது அவர் பேசியதாவது:-
கால்நடை வளர்ப்பு ஊக்குவிப்பு 
தமிழகத்தில் கால்நடை வளத்தை பெருக்கும் நோக்கத்துடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக விளங்கும் கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து கிராம பொருளாதார ஏற்றத்திற்கு சிறந்த அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டிற்கு வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கி தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டம் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பெண் பயனாளிகள் வீதம் மொத்தம் 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஆயிரம் பெண் பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகள் வீதம் ரூ.1 கோடியே 91 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் விரைவில் வழங்கப்படும்.
விழிப்புணர்வு முகாம்கள் 
தொலைதூர கிராமங்களில் பராமரிக்கப்படும் கால்நடைகளும் பயனடையும் வகையில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த முகாம்களில் பங்கேற்று, மருத்துவர்களின் ஆலோசனைபடி தங்களது கால்நடைகளை பராமரித்துகொள்ள வேண்டும். மேலும் வரும் ஆண்டுகளில் கால்நடை வளர்ப்பு மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் தமிழக முதல்-அமைச்சரால் செயல்படுத்தப்பட உள்ளன. 
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பொறுப்பு) பாலகுரு, முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், துணை இயக்குனர் டாக்டர் மரியசுந்தர், உதவி இயக்குனர்கள் டாக்டர் அருள்ராஜ், டாக்டர் முரளி, தாசில்தார் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story