‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தொற்றுநோய் பரவும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு அனுப்பன்குளம் பகுதியில் சாக்கடை கழிவுகள் அகற்றப்படாமல் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த கழிவுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன், சிவகாசி.
கழிவறை தேவை
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பெருங்காமநல்லூர் கிராமத்தில் பொதுகழிவறை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பெண்களும், ஆண்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுகழிவறை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், பேரையூர்.
வேகத்தடை வேண்டும்
மதுரை புட்டுதோப்பு மங்கையர்கரசி பள்ளியில் இருந்து ஆரப்பாளையம் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையில் வேகத்தடைகள் இல்லை. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வேகமாக செல்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்களும், பொது மக்களும் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
ஜான்சன், மதுரை.
பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழையபஸ் நிலையத்தில் இருந்து கோவிலூர் வரை விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் இருபுறமும் பாலம் கட்டும் பணி மெதுவாக நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உஷாராணி, காரைக்குடி.
பஸ் வசதி
மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து களிமங்கலம், அரசனூர் ஆகிய பகுதிகளுக்கு குறைவான அளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
சிவா, மதுரை.
Related Tags :
Next Story