காளியம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா
எடப்பாடி அருகே உள்ள காளியம்மன் கோவில்களில் நடந்த தீமிதி திருவிழாவில் 10 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
எடப்பாடி:-
எடப்பாடி அருகே உள்ள காளியம்மன் கோவில்களில் நடந்த தீமிதி திருவிழாவில் 10 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வெள்ளாண்டிவலசு
எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு ஸ்ரீ ஓம் சக்தி காளியம்மன், முனியப்பன் கோவில் மாசிமாத திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் இரவில் அம்மன் திருவீதி உலா நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் காளியம்மனுக்கு பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு காளியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
தீமிதி திருவிழா
இந்த நிலையில் மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் முதலில் கோவில் பூசாரி சக்தி கரகத்தை சுமந்துகொண்டு தீ மிதித்தார். பின்பு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், குழந்தைகளை தூக்கிக் கொண்டும் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
இதேபோல் தாவந்தெரு காளியம்மன் கோவிலும் மாசி திருவிழா நடைபெற்றது. அதையொட்டி நேற்று முன்தினம் இரவு காளியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், நேற்று காலை தீமிதி விழாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து, பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபாடு நடத்தினர்.
10 ஆயிரம் பக்தர்கள்
2 கோவில்களிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து அம்மனை வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவையொட்டி எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story