சத்தியமங்கலம் பகுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ரூ.45 கோடியில் குடிநீர் தொட்டி கட்ட திட்டம்; நகராட்சி தலைவர் தகவல்
சத்தியமங்கலம் பகுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ரூ.45 கோடியில் குடிநீர் தொட்டி கட்ட திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக நகராட்சி தலைவர் தெரிவித்து உள்ளார்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பகுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ரூ.45 கோடியில் குடிநீர் தொட்டி கட்ட திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக நகராட்சி தலைவர் தெரிவித்து உள்ளார்.
கூட்டம்
சத்தியமங்கலம் நகராட்சியின் முதல் கூட்டம் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது.
கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆர்.நடராஜ், ஆணையாளர் சரவணகுமார், பொறியாளர் சிவக்குமார், சுகாதார அதிகாரி சக்திவேல், மேலாளர் நாகராஜ் மற்றும் 27 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ரூ.45 கோடி
கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் முதலில் தங்களை அறிமுகப்படுத்தி பேசினார்கள்.
பின்னர் கூட்டத்தில் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
வேலுச்சாமி (தி.மு.க.):- நகராட்சி பணியாளர்கள் என்னுடைய வார்டில் எனக்கு தகவல் கொடுக்காமலேயே வேலைகளை செய்கிறார்கள்.
தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- இனிமேல் அவ்வாறு நடக்காத அளவுக்கு பார்த்து கொள்ளப்படும்.
லட்சுமணன் (அ.தி.மு.க.):- எனது வார்டு மட்டுமின்றி, நகர் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- நகர் முழுவதும் இதுவரை குடிநீர் வினியோகம் இல்லாத பகுதிகளுக்கும் மற்றும் குடிநீர் வினியோகத்தை விரிவுபடுத்தவும் ரூ.45 கோடியில் புதிய குடிநீர் தொட்டி கட்ட அரசின் அனுமதிக்காக திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கையேடு
லட்சுமணன் (அ.தி.மு.க.):- பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீரை வெளியேற்ற குழாய் இணைப்புக்கு அதிக அளவில் பணம் வசூல் செய்யப்படுகிறது.
பொறியாளர் சிவக்குமார்:- அரசு நிர்ணயித்துள்ள தொகைதான் வசூல் செய்யப்படுகிறது.
அரவிந்த் சாகர் (பா.ஜ.க.):- எனது வார்டில் சாக்கடை வடிகால்கள் மிகவும் பழுதாகி காணப்படுகிறது. இதை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- விரைவில் சரி செய்து கொடுக்கப்படும்.
திருநாவுக்கரசு (பா.ம.க.):- நகராட்சி சார்பில் நடைபெறும் நலத்திட்டங்களை குறித்த கையேடு ஒன்று கொடுக்க வேண்டும். மேலும் எனது வார்டில் மற்றும் அருகில் உள்ள சில வார்டுகளில் உள்ள குப்பைகள் எல்லாம் சேகரிக்கப்பட்டு எடுத்து வந்து எனது வார்டில் உள்ள ஒரு பள்ளத்தில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மின் விளக்குகள்
சக்திவேல் (சுகாதார அலுவலர்):- பள்ளத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிப்பார்கள். பின்னர் பிரிக்கப்பட்ட குப்பை அங்கிருந்து எடுத்து செல்லப்படும்.
சரவணன் (தி.மு.க.):- எனது வார்டில் மட்டுமல்ல சத்தி நகரில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தலைவர் முழு முயற்சி எடுக்க வேண்டும்.
தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- முயற்சி மேற்கொள்ளப்படும். அதுமட்டுமின்றி சத்தி நகராட்சி முழுவதும் ரூ.40 லட்சத்தில் புதிய மின் விளக்குகள் அமைக்கப்படும், ரூ.20 லட்சம் செலவில் பழைய மின்விளக்குகள் சீரமைக்கப்படும. மேலும் நகர முன்னேற்றத்துக்கு அதிகாரிகள் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதுபோல நாங்கள் அனைவரும் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்.
மேற்கண்டவாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.
Related Tags :
Next Story