கழிவறையில் வைத்து பள்ளி மாணவியை கற்பழித்த வழக்கு; ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
கழிவறையில் வைத்து பள்ளி மாணவியை கற்பழித்த வழக்கில், ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெங்களூரு விரைவு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது
பெங்களூரு: கழிவறையில் வைத்து பள்ளி மாணவியை கற்பழித்த வழக்கில், ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெங்களூரு விரைவு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மாணவி கற்பழிப்பு
பெங்களூரு இந்திராநகர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பழைய திப்பசந்திராவை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் இந்தி ஆசிரியராக பணியாற்றினார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த 6 வயது மாணவியை கழிவறைக்கு அழைத்து சென்று ஜெய்சங்கர் கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அந்த மாணவியை அவரது தாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது மாணவி கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியிடம் அவர் தாய் கேட்ட போது மாணவியை, ஆசிரியர் ஜெய்சங்கர் கற்பழித்தது தெரியவந்தது.
20 ஆண்டுகள் சிறை
இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் ஜீவன்பீமாநகர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெய்சங்கரை கைது செய்தனர். அவர் மீது பெங்களூரு விரைவு கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் கைதாகி இருந்த ஜெய்சங்கர் கடந்த 2019-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்து விட்டார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் ஜெய்சங்கர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிருபணம் ஆகி உள்ளது. இதனால் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி கூறினார். இதன்பின்னர் ஜெய்சங்கரை போலீசார் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story