குமரியில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி தர்ப்பூசணி, இளநீர் விற்பனை அமோகம்


குமரியில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி தர்ப்பூசணி, இளநீர் விற்பனை அமோகம்
x

குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
சுட்டெரிக்கும் வெயில்
இருபருவ மழை மட்டும் இன்றி கோடை மழையும் தவறாமல் பெய்யும் மாவட்டமாக குமரி மாவட்டம் திகழ்ந்தது. இதனால் கோடை காலம் என்பது குமரி மாவட்ட மக்களுக்கு பெரிய அளவில் தொந்தரவாக தெரியாது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த சீதோஷ்ண நிலை மாறி வருகிறது. 
வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் கோடை வெயிலின் தாக்கம் குமரி மாவட்டத்தில் சற்று தெரியும். அக்னி நட்சத்திர நாட்களில் அதைவிட சற்று கூடுதலாக இருக்குமே தவிர வெயில் வாட்டி வதைத்தது இல்லை. 
ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை 10 மணிக்கு மேல் தெருவில் இறங்கி நடக்க மக்கள் தயங்குகிறார்கள். வேலை காரணமாக வெளியே சென்று தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே செல்கிறார்கள். அப்படி வெளியே செல்கிறவர்கள் வெயிலில் காய்ந்து கடுமையான அவதிக்கு ஆளாகிறார்கள். 
உஷ்ணம் நிலவுகிறது 
பஸ்களிலும், வாகனங்களிலும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. வெயில் காரணமாக பஸ்களில் ஜன்னலோர இருக்கைக்கு யாரும் ஆசைப்படுவது இல்லை. வீசும் காற்றும் அனலாய் சுடுகிறது. வெளியே நடமாடி விட்டு, வீட்டுக்கு திரும்பும் போது மக்கள் வியர்வைக் குளியலில் தொப்பென்று நனைந்து விடுகிறார்கள். உடனே தண்ணீரில் ஒரு குளியல் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. 
அத்துடன் வெயிலின் தாக்கம் முடிந்து விடுமா என்ன?, பகல் முழுவதும் வெப்பம் தகதகவென தகித்து, மாடியில் தீப்பிடித்து எரிவதைப்போல வீட்டுக்குள் உஷ்ணம் நிலவுகிறது. 
இரவிலும்...
பகலில் நிலைமை இப்படி இருக்க, இரவில் அதைவிட பெரிய கொடுமையாக உள்ளது. கதவு, ஜன்னலை திறந்து வைத்திருந்தாலும் புழுக்கம் வாட்டி வதைக்கிறது. இதனால் இரவிலும் தூக்கமின்றி மக்கள் தவிக்கிறார்கள். 
சுழலும் மின் விசிறியில் இருந்து அனல் காற்றே தெறிப்பதால் விசிறியின் கீழ் படுக்கவும் தயங்குகிறார்கள். இதனால் பல குடும்பத்தினர் இரவில் மொட்டை மாடிக்கு ஓடுகிறார்கள். 
மழைதான் மருந்து 
வெப்பத்தின் இந்த கொடுமைகளை சமாளிக்க மக்கள் பல்வேறு உபாயங்களை கையாண்டு வருகிறார்கள். பெரும்பாலான பெண்களும், முதியவர்களும் குைட பிடிக்காமல் வெளியே நடப்பதில்லை. இளநீர், நுங்கு, சர்பத், மோர், தர்ப்பூசணி போன்ற குளிர்ந்த நீராகாரங்களை அவ்வப்போது பருகி வருகிறார்கள். தற்போது வெள்ளரிப்பிஞ்சு வரத்து தொடங்கியுள்ளது. இதற்காக சாலையோரங்களில் தற்காலிக கடைகள் பெருகிவிட்டன. வெயிலின் வெப்பத்தை தணிக்க கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்தமாக குளித்ததை காண முடிகிறது. இப்படி எத்தனை உபாயங்களை கையாண்டாலும் அது அப்போதைய தீர்வாக மட்டுமே உள்ளது. வெப்பத்தின் கொடுமையில் இருந்து முழுமையாக தப்பிக்க, மழை தான் மருந்தாக இருக்க முடியும்.
 எனவே கோடை மழை பொழியுமா? உடலுக்கும், உள்ளத்துக்கும் குளிர்ச்சி கிடைக்குமா? என்பது வருண பகவான் கையில் தான் உள்ளது. இதற்கிடையே மார்ச் மாதத்திலேயே இப்படி வெயில் அடித்தால் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வெயிலின் கொடுமை எப்படி இருக்குமோ? என்று பொதுமக்கள் அச்சம் கொள்கிறார்கள்.

Next Story