விவசாயிகளுக்கு பயிற்சி
விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
ஆலங்குளம்:
ஆலங்குளம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் 2021-2022 எண்ணெய்வித்துகள் திட்டத்தின் கீழ், குறிச்சான்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை துணை இயக்குனர் நல்லமுத்துராஜா தலைமை தாங்கி, எண்ணெய்வித்து பயிர்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். துணை வேளாண்மை அலுவலர் முருகன் வரவேற்று பேசினார்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் வெங்கட சுப்பிரமணியன், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியத்தில் வேளாண் கருவிகள், விதைகள், உரங்களை பெறுவது குறித்து விளக்கி கூறினார். எண்ணெய்வித்து பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி போன்ற பயிர்களின் சாகுபடியில் விதை நேர்த்தி முறைகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து அம்பை நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தங்கபாண்டியன் விளக்கி கூறினார். வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன் துறைசார்ந்த திட்டங்கள் குறித்து பேசினார்.
குறிச்சான்பட்டி பஞ்சாயத்து தலைவர் மகரஜோதி சரவணன் வாழ்த்தி பேசினார். வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் லட்சுமி, சிவப்பிரியா, சவுமியா, தேன்மொழி, காயத்ரி, மீனாட்சி, சிவதிரிஷ்வி, பாத்திமா நஸ்ரின், பொன் சினேகா, நித்திய பிரியங்கா, பிரவீனா ஆகியோர் நிலக்கடலையில் ஜிப்சம் இடுவது, நுண்ணூட்ட உரம் பயன்பாடு குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தனர். உதவி வேளாண்மை அலுவலர்கள் கஸ்தூரி, மணிகண்டன், அட்மா தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் சுமன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story