‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின்வாரியத்தின் உடனடி நடவடிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் முடிச்சூர் சாலை கிருஷ்ணா நகர் 3-வது தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தில் வயர்கள் உரசி அடிக்கடி தீப்பொறி எழும் சம்பவம் குறித்த செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின்வாரியம் எடுத்த உடனடி நடவடிக்கையால் மின்கம்பம் சரி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மகிழ்ந்த அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பாராட்டை தெரிவித்தனர்.
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
சென்னை மாதவரம் அலெக்ஸ் நகர் ஏ-காலனி பகுதியில் இருக்கும் சாலையில் அமைந்துள்ள கழிவுநீர் வடிகால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இது கடந்த சில நாட்களாக தொடர்வதால் கழிவுநீர் சாலை முழுவதும் வழிந்தோடுகிறது. மேலும் பொதுமக்களே கழிவு நீரை கால்வாயில் இருந்து எடுத்துவிடும் அவல நிலையுள்ளது. பொது மக்களை இந்த துர்நாற்றத்தில் இருந்தும், இதனால் பரவக்கூடிய நோய் தொற்றில் இருந்தும் பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- திருமலை, மாதவரம்.
மின் இணைப்பு பெட்டியில் விபரீதம்
சென்னை நுங்கம்பாக்கம் ஜகநாதன் மெயின் ரோட்டில் ஒரு மின் இணைப்பு பெட்டி உள்ளது. இது நீண்ட நாட்களாக மூடப்படாமல் திறந்த நிலையில் காட்சியளிக்கிறது. தற்போதைக்கு அட்டையை வைத்து அடைத்து வைத்துள்ளனர். இருப்பினும் சாலை அருகே இருப்பதால் விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு மின் இணைப்பு பெட்டி சரி செய்யப்படுமா?
- நடைபாதை பாதசாரிகள்.
சேதமடைந்த நடைபாதை
சென்னை அரும்பாக்கம் மாசுகட்டுப்பாட்டு வாரியம் அலுவலகம் அருகே இருக்கும் தனியார் பள்ளியை ஒட்டியுள்ள நடைபாதையானது சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் நடைபாதையில் உள்ள கழிவுநீர் வடிகால்வாய் மூடிகளும் உடைந்து காணப்படுகின்றன. பள்ளி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் நடைபாதை என்பதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நடைபாதையை சீரமைத்து தர வேண்டும்.
- ஷர்மிளா விஸ்வநாதன், அரும்பாக்கம்.
அகற்றப்படாத குப்பைகள்
சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 3-வது கிராஸ் தெருவில் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே குவிந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக துப்புரவு பணியாளர்களும் வராததால் அப்பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
- கதிர், சாஸ்திரி நகர்.
பராமரிப்பற்ற பூங்கா கவனிக்கப்படுமா?
சென்னை ஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகரில் உள்ள பூங்கா கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பூங்கா முழுவதும் குப்பைகள் சூழ்ந்தும், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும் காணப்படுகிறது. மேலும் இங்கு உள்ள சிறுவர்களுக்கு விளையாடுவதற்கு இந்த பூங்காவை தவிர வேறு எந்த திடலும் அருகில் இல்லை. மேலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதற்கும் வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் நலன் கருதி பூங்காவை திறக்க வேண்டும்.
- பொது மக்கள், கலைமகள் நகர்.
வேகத்தடை வேண்டும்
சென்னை சூளைமேடு சக்தி நகர் 2-வது தெருவில் வேகத்தடை இல்லாததால் விபத்துகள் நேரிடுகின்றன. இந்தப் பகுதியில் கோவில் உள்ளதால் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஆகையால் சாலையை கடக்கும் பொழுது வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் நேரிடுகின்றன. எனவே இந்தப் பகுதியில் ஒரு வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும்.
- எழில்ராஜன், சமூக ஆர்வலர்.
சாய்ந்த மின்கம்பங்கள் கவனிக்கப்படுமா?
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வையாவூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அப்பாவுநகர் மற்றும் வேடந்தாங்கல் சாலையில் உள்ள 2 மின் கம்பங்கள் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் இருக்கிறது. இவை எப்போது வேண்டுமாலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மின்வாரியம் கவனித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா?
ராஜா, சமூக ஆர்வலர்.
எரியாத தெரு விளக்கு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஏ-என் குப்பம் கிராமத்தில் உள்ள இந்த உயர் கோபுர விளக்கு கடந்த 6 மாதங்களாக எரிவதில்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமில்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தெரு விளக்கு எரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேத்யூ, கும்மிடிப்பூண்டி.
மோசமான சாலையும்... பொதுமக்கள் அவதியும்...
சென்னை வளசரவாக்கம் ஜானகி நகர் லாமெக் தெருவில் சாலை படுமோசமாக இருக்கிறது. குண்டும் குழியுமான சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் போக்கும் தொடர்கதையாகி வருகிறது. வயதானவர்கள் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். பல ஆண்டுகளாக இந்த தெருவில் சாலை சீரமைக்க படவே இல்லை. எனவே வாகன ஓட்டிகள், பொது மக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும்.
- சமூக ஆர்வலர்.
Related Tags :
Next Story