பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு


பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 11 March 2022 6:29 PM IST (Updated: 11 March 2022 6:29 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஊராட்சி தலைவர் கூறினார்.

திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஊராட்சி தலைவர் கூறினார். 
மாவட்ட ஊராட்சி கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி கூட்டம் தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கலியபெருமாள், மாவட்ட ஊராட்சி செயலாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி இயக்குனர் பழனிசாமி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தங்கள் பகுதி கோரிக்கை குறித்து பேசினர். இதன் விவரம் வருமாறு
பாப்பா சுப்பிரமணியன்: திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை புதிய கட்டிடம் திறப்பு விழா கல்வெட்டில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பெயரும் இடம் பெற வேண்டும்.
சமுதாய கூடம்
சுப்பிரமணியன்: திருவிழிமிழலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான வசதிகள் செய்து கொடுத்தும், புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்த மாவட்ட ஊராட்சி தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திருவாரூரில் இருந்து எரவாஞ்சேரிக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்.
பன்னீர்செல்வம்: கிராம பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாய கூடங்கள்; போதிய அளவு கட்டித் தர வேண்டும்.
ஷோபா: பைங்கநாடு பகுதி பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இந்த பள்ளியில் மாணவர்கள் அமர இருக்கை வசதி இல்லாததால் தரையில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை இருந்து வருகிறது. கழிவறை வசதி இல்லாமல் உள்ளது. 
குடிநீர் பிரச்சினை
ரமேஷ்: கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள அங்காடி கட்டிடம் இடிந்து விட்டதால் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும்.
கருணாகரன்: மணிகண்டி-கருப்பூர் இடையே ஆற்றில் இணைப்பு பாலம் கட்ட  டெண்டர் விடபட்டு தொடங்கிய பணிகள் நிறுத்தப்பட்டது. எனவே இந்த பணியை மீண்டும் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுஜாதா: தாளடி அறுடை பணிகள் நடைபெற்று நிறைவு பெறும் நிலையில் உள்ளதால் நெல் கொள்முதல் நிலையங்களை இம்மாதம் இறுதி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும். கட்டிமேடு, ஆதிரங்கம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கூட்டுக்குடிநீர் வசதியின்றி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்ள். எனவே குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு திட்டங்கள்
தமயந்தி: எனவே எனது பகுதியில் சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும். சுடுகாடு கூரை சாலை மிகவும் பழுதடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும்.
துணைத்தலைவர்: அரசு திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் அரசு அதிகாரிகளின் பணி மிக முக்கியமானது. எனவே அந்த பணியை உணர்ந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும். எந்த திட்டம் வந்தாலும், அதனால் ஏற்படும் நன்மைகளை உணர்ந்து வரவேற்க வேண்டும். 
நன்றி
தலைவர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க உரிய நிதியை கல்வித்துறை ஒதுக்கியுள்ளது. இதை பயன்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம். சாலை, குடிநீர் வசதிகளை செய்தர நடவடிக்கை எடுக்கப்படும். சமுதாய கூடங்கள் அதிகமாக கட்டி தரப்படும். மக்களை பாதுகாக்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
மருத்துவ உயர் படிப்பில் 27 சதவீதம் இடஒதுக்கீடு ஒ.பி.சி. பிரிவினருக்கு பெற்று தந்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்வது. உக்ரைன் நாட்டிலிருந்து மாணவர்களை உரிய நேரத்தில் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ததற்கும், திருவாருர் ஆழித்தேரோட்ட விழாவை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுத்ததற்கும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story