100 இடங்களில் அக்னிகுண்டம் வைக்கப்படும்


100 இடங்களில் அக்னிகுண்டம் வைக்கப்படும்
x
தினத்தந்தி 11 March 2022 9:25 PM IST (Updated: 11 March 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

அக்னி குண்டத்தை நிறுவ அனுமதி அளிக்காவிட்டால் 100 இடங்களில் அக்னிகுண்டம் வைக்கப்படும் என்று பா.ம.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க. புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. 

தெற்கு மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணை பொது செயலாளர்கள் இரா.காளிதாஸ், அ.வே.பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.முருகன் வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை பொறுப்பாளர்கள் பொன்.கங்காதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, கே.ஆர்.வெங்கட்ராமன், தர்மபுரி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது, மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பங்களையும், கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் புதிய பொறுப்பாளர்கள் பதவிகளுக்கான விண்ணப்பங்களையும் பெற்றுக் கொண்டனர். 

இதில் 300-க்கும் மேற்பட்டோர் மனுக்களை வழங்கினர். 

கூட்டத்தில் வருகிற 2026-ம் ஆண்டு தமிழகத்தில் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராக பா.ம.க. கொள்கைகளை விளக்கி நகர மற்றும் கிராம மக்களிடையே திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும்.

 திருவண்ணாமலையில் திறக்கப்படாமல் இருக்கும் ரெயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 நாயுடுமங்கலத்தில் அகற்றப்பட்ட வன்னியர்களின் அடையாள சின்னமான அக்னி குண்டத்தை அதே இடத்தில் நிறுவ அனுமதி அளிக்காவிட்டால் திருவண்ணாமலையில் இருந்து நாயுடுமங்கலம் வரை 100 இடங்களில் அக்னிகுண்டத்தை டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் வைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் திரளான பா.ம.க.வினர் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை நகர செயலாளர் பத்மநாபநாயுடு நன்றி கூறினார்.

Next Story