திண்டுக்கல்லில் சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரம்


திண்டுக்கல்லில் சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 11 March 2022 10:02 PM IST (Updated: 11 March 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரே நாளில் 5 டன் குப்பைகள் அகற்றப்பட்டது

திண்டுக்கல்:
சாக்கடை கால்வாய்கள்
திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகளில் 9 பெரிய சாக்கடை கால்வாய்கள் உள்ளன. இவை 15 அடி அகலம், 6 அடி ஆழம் கொண்டவை ஆகும். இந்த நிலையில் சாக்கடை கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் அவை சுருங்கி வருவதாகவும், கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதாகவும் மாநகராட்சி மேயர் இளமதிக்கு புகார் வந்தது.

அதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள பெரிய கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனுக்கு அவர் உத்தரவிட்டார். அதையடுத்து மாநகர் நல அலுவலர் இந்திரா முன்னிலையில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
5 டன் குப்பைகள்
அதன்படி  திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணி தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாயில் கொட்டப்பட்ட குப்பைகள் முதலில் அகற்றப்பட்டன. பின்னர் கால்வாயை தூர்வாரி எடுக்கப்பட்ட மண் கால்வாயின் கரை பகுதியிலேயே கொட்டி கரையை பலப்படுத்தும் பணி நடந்தது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களிடம் கேட்ட போது, 1-வது வார்டில் உள்ள சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டது. கால்வாயில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நேற்று பகல் முழுவதும் நடந்தது. ஒரே நாளில் 5 டன் குப்பைகள் சாக்கடை கால்வாயில் இருந்து அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கால்வாயின் ஒரு பகுதி மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளது. விரைவில் சாக்கடை கால்வாய் முழுமையாக தூர்வாரப்படும் என்றனர்.

Next Story