பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் உள்ளாட்சி பிரதிநிதிகள் உதவியாக இருக்க வேண்டும் முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை
பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உதவியாக இருக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா அறிவுரை கூறினார்
விழுப்புரம்
விழிப்புணர்வு கலைப்பயணம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக்குழுவின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் சந்திப்பு என்ற விழிப்புணர்வு கலைப்பயணம் நம் பள்ளி நம் பெருமை என்ற முழக்கத்தோடு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.
இந்த பிரசார நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா தொடங்கி வைத்து பேசினார். அப்போது பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்போடு செயல்படுத்த வேண்டும். மாணவர்களின் கற்றல் நிலைகளை மேம்படுத்துவதற்கு பெற்றோர்கள், பள்ளியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கும், பள்ளியின் நிர்வாகத்திற்கும் தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை செய்வதற்கு முன்வர வேண்டும்.
16 கலைக்குழுக்கள்
இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விழுப்புரம் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு 16 கலைக்குழுக்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர் என்றார்.
இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் தனவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு மாவட்ட கருத்தாளர் பாலமுருகன் மற்றும் கலைக்குழுவினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story