சுகாதாரமான குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


சுகாதாரமான குடிநீர் கேட்டு  காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 March 2022 10:29 PM IST (Updated: 11 March 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சியில் சுகாதாரமான குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மந்தாரக்குப்பம், 

மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  தற்போது இங்கு வினியோகிக்கும் குடிநீர் சுகாதாரமற்று உள்ளது. மண் கலந்த நிலையில் வருவதால், இதை மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

 பெரியாக்குறிச்சியில் உள்ள என்.எல்.சி. சுரங்க பகுதியில் மண் வெட்டி எடுப்பதற்கு வெடி வைக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் அதிர்வுகளினால் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளுக்குள் மண் சரிந்து விழுந்து, குடிநீர் களிமண் கலந்த நிலையில் வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

சாலை மறியல்

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் பெரியாக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே  கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கால குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தகவலறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு  ராஜேந்திரன்,  மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி, துணை தலைவர் சவுந்தர்ராஜன், கம்மாபுரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிகாசலம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு  விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.  

அதில், 4 நாட்களுக்குள் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story