விவசாயம், தொழில், சுகாதாரம், மனித வளம், போக்குவரத்தை மேம்படுத்த ரூ.4 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் மராட்டிய பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயம், தொழில், சுகாதாரம், மனித வளம், போக்குவரத்தை மேம்படுத்த ரூ.4 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் மராட்டிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபை கூட்டம் கடந்த 3-ந் தேதி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உரையுடன் தொடங்கியது.
பற்றாக்குறை பட்ஜெட்
கொரோனா சூழலால் பொருளாதாரம் பாதிப்பு, வர இருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தல் போன்றவற்றால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாநில அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் (வரவு-செலவு திட்டம்) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இது மராட்டிய மகா விகாஷ் அகாடி அரசின் (சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி) 3-வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டை நிதி இலாகாவை கவனித்து வரும் துணை முதல்-மந்திரி அஜித் பவார் மதியம் 1 மணி அளவில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் வருவாய் மதிப்பீடு ரூ.4 லட்சத்து 3 ஆயிரத்து 427 கோடியாக உள்ளது. செலவினம் ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 780 கோடியாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதனால் ரூ.24 ஆயிரத்து 353 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. எனவே இது பற்றாக்குறை பட்ஜெட் ஆகும்.
5 அம்ச திட்டம்
இந்த பட்ஜெட் விவசாயம், சுகாதாரம், மனித ஆற்றல், போக்குவரத்து, தொழில் வளம் ஆகிய 5 அம்சங்களை மையமாக கொண்டது என அஜித்பவார் அறிவித்தார். மேலும் பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:-
விவசாயம், சுகாதாரம், மனித ஆற்றல், போக்குவரத்து, தொழில் வளம் ஆகிய 5 அம்ச அம்சங்களை அமல்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதற்கு ‘பஞ்சசூத்ரி வளர்ச்சி’ என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்காக அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி செலவிடப்படும். இந்த நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 215 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
கடனை சரியாக திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி பட்ஜெட்டில் அறிவித்தேன். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக இதை செயல்படுத்த முடியவில்லை. இந்த நிதியாண்டில் ஊக்கத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
20 லட்சம் விவசாயிகள்
இதன் மூலம் 20 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி தேவைப்படும்.
60 ஆயிரம் விவசாய பம்ப் ஷெட்களுக்கு இந்த நிதியாண்டில் மின் இணைப்பு கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்ற 4 அம்ச திட்டங்கள் குறித்தும் பட்ஜெட்டில் பட்டியலிட்ட அஜித்பவார், இதன் மூலம் மிகப்பெரிய அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்ட முதல் மாநிலமாக மராட்டியம் மாறும் என்று பெருமிதம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story