ஆன்லைன் நிறுவனத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு கார் பரிசு விழுந்துள்ளதாக கூறி பள்ளி ஆசிரியரிடம் ரூ 1 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
ஆன்லைன் நிறுவனத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு கார் பரிசு விழுந்துள்ளதாக கூறி அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
விழுப்புரம்
அரசு பள்ளி ஆசிரியர்
விழுப்புரத்தை சேர்ந்தவர் ஜான்வில்லியம் (வயது 46). அரசு பள்ளி ஆசிரியரான இவருக்கு கடந்த 28-ந் தேதி அன்று மர்ம நபர் ஒருவர், ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் 13-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கார் பரிசு விழுந்துள்ளதாக கூறி ஒரு கடிதத்தை விரைவு தபால் மூலம் அனுப்பியுள்ளார். இதையடுத்து ஜான்வில்லியம், அந்த தபாலை பிரித்து அதிலிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர், ஜான்வில்லியத்திடம் உங்களுக்கு கார் பரிசாக விழுந்துள்ளதாகவும், அந்த காரை பெற 4 சதவீத முன்தொகையாகவும் மற்றும் ஜி.எஸ்.டி.யையும் சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 435-ஐ செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரூ.1 லட்சம் மோசடி
இதை நம்பிய ஜான்வில்லியம், தனது மனைவியின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே செயலி மூலம் 1.3.2022 அன்று 4 தவணைகளாக ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 435-ஐ அந்த நபர் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம நபர், ஜான்வில்லியத்துக்கு கார் அனுப்பவில்லை. பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்தது மட்டுமின்றி மேலும் பணம் கட்டக்கோரி ஜான்வில்லியத்தை அந்த நபர் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான்வில்லியம், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பூங்கோதை, சப்-இன்ஸ்பெக்டர்கள் முகமதுஅசாருதீன், ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரிடம் பண மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story