உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்


உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 11 March 2022 11:21 PM IST (Updated: 11 March 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் அருகே புக்குளத்தில் கோவில் திருவிழாக்களுக்கு உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குடிமங்கலம்
குடிமங்கலம் அருகே புக்குளத்தில் கோவில் திருவிழாக்களுக்கு உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உருவார பொம்மை
மண்ணைக் குழைத்து உருவங்கள் செய்து அதை சூளையில் இட்டு சுட்டு உருவாக்கப்படும் உருவார பொம்மைகள் கோவில் திருவிழாக்களில் நேர்த்திக் கடனாக செலுத்தப்படுகிறது. கோவில் திருவிழாக்களில் பெரிய அளவிலான உருவார பொம்மைகள் தெய்வங்களாக உருவாக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. 
தமிழகத்தின் பல பகுதிகளில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை உள்ளது. காவல் தெய்வங்களான கருப்பசாமி, மாகாளியம்மன், பட்டாளத்தம்மன் உள்ளிட்ட மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் கோவில் திருவிழாக்களில் வழிபாடு செய்வதற்காக உருவாக்கப்படுகிறது.  உருவ வழிபாடு தோன்றிய காலத்திலிருந்தே உருவார பொம்மைகளை நேர்த்தி கடனாக செலுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக பெதப்பம்பட்டி அருகே உள்ள ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆண், பெண், குழந்தை, ஆடு, மாடு, நாய் குதிரை என பலவகைப்பட்ட உருவங்களை உள்ளடக்கிய உருவார பொம்மைகளை கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபாடு செய்கின்றனர்.
கோவில் திருவிழாக்கள்
இதுகுறித்து புக்குளத்தை சேர்ந்த மண்பாண்டத்தொழிலாளி கனகராஜ் கூறியதாவது:- கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களின் போது தெய்வங்களின் உருவங்கள் களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் சுட்டு கோவில்களுக்கு வழிபடுவதற்காக உருவாக்கப்படுகிறது. இதற்காக கொழுமம், கோதவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் களிமன் பயன்படுத்தப்படுகிறது. கோவில் நிர்வாகத்தினர் தங்களுக்குத் தேவையான தெய்வங்களை உருவாக்க சொல்வார்கள் அந்த ஆர்டரின்பேரில் சிலைவடிவிலான உருவார பொம்மைகளை உருவாக்கி வருகிறோம்.  கோவில் திருவிழாக்கள் தவிர மற்ற நாட்களில் திருவிழாக்களுக்கு ஏற்றது போல் அகல் விளக்குகள், சிறிய அளவிலான உருவார பொம்மைகள், பொங்கல் பானைகள், வீடுகளில் பயன்படுத்தப்படும் மண்ணால் செய்யப்பட்ட அடுப்புகள், பானைகள் இவற்றை செய்து வருகிறோம். உருவார பொம்மைகளை செய்யும்போது தொழிலாளர்களுக்கு குறைந்த அளவில் மட்டுமே லாபம் கிடைக்கிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story