பெயிண்டர் கொலை வழக்கில் ஓட்டல் தொழிலாளி கைது
திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் பெயிண்டர் கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில் ஓட்டல் தொழிலாளி கைது செய்யப்பட்டார். குடிபோதையில் தூங்கவிடாமல் செய்ததால் இந்த கொலை நடந்துள்ளது.
திருப்பூர்
திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் பெயிண்டர் கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில் ஓட்டல் தொழிலாளி கைது செய்யப்பட்டார். குடிபோதையில் தூங்கவிடாமல் செய்ததால் இந்த கொலை நடந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெயிண்டர் குத்திக்கொலை
திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் பிள்ளையார் கோவில் பின்புறம் கடந்த மாதம் 21-ந் தேதி காலை கத்திக்குத்து காயத்துடன் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கொலையானவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதர்(வயது 41) என்பதும், இவர் திருப்பூரில் ரோட்டோரம் தங்கியிருந்து பெயிண்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
தனிப்படை விசாரணை
ஸ்ரீதரை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். ஸ்ரீதர் கொலையான இடத்தில் மது பாட்டில் கிடந்தது. இதனால் குடிபோதை தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்ததை போலீசார் உறுதிப்படுத்தினார்கள். நள்ளிரவில் ஸ்ரீதருடன் தங்கியிருந்தவர்கள் யார் என்பது குறித்தும் துப்பு துலக்கினார்கள்.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார்(40) என்பவர் ஸ்ரீதருடன் தகராறில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து செந்தில்குமாரை தனிப்படையினர் தேடி வந்த நிலையில், அவருடைய செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை கண்காணித்தனர்.
ஓட்டல் தொழிலாளி கைது
அதில் திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவருடன் செந்தில்குமார் அடிக்கடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அந்த பெண்ணை பிடித்து அவர் மூலமாக செந்தில்குமாரை தொடர்பு கொண்டு திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தனிப்படை போலீசார் செந்தில்குமாரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து தெரிய வந்தது.
சம்பவத்தன்று இரவு 11½ மணி அளவில் ஸ்ரீதரும், அவருடைய நண்பரும் மதுபோதையில் பேசிக்கொண்டிருந்தனர். செந்தில்குமார் அருகில் படுத்திருந்தார். காலையில் ஓட்டலுக்கு செல்ல வேண்டும். சத்தம் போடாமல் தூங்குமாறு செந்தில்குமார், ஸ்ரீதரிடம் கூறினார். ஆனால் ஸ்ரீதர் தனது நண்பருடன் தொடர்ந்து புலம்பியபடி இருந்ததால் தூங்க முடியாமல் தவித்த செந்தில்குமார் அவர்களை திட்டினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. கோபமடைந்த செந்தில்குமார் கத்தியால் ஸ்ரீதரை குத்திவிட்டு தப்பியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து செந்தில்குமாரை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டினார்.
Related Tags :
Next Story