விவசாய விளை பொருட்களை அழிக்கும் மான்கள்
சேவூர் சுற்று பகுதியில் வயக்காடு, பந்தம்பாளையம், கன்னடாங்குளம்புதூர், ஆகிய பகுதிகளில் விவசாய விளை பொருட்களை அழிக்கும் மான்களால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சேவூர்
சேவூர் சுற்று பகுதியில் வயக்காடு, பந்தம்பாளையம், கன்னடாங்குளம்புதூர், ஆகிய பகுதிகளில் விவசாய விளை பொருட்களை அழிக்கும் மான்களால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மான்களால் சேதம்
சேவூர் சுற்றுப்பகுதியில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் ஆண்டுதோறும் சீசனுக்கு ஏற்றவாறு வாழை, மல்பரி செடி (பட்டு), பூச்செடிகள், தட்டக்காய், மக்காச்சோளப்பயிர்கள், நிலக்கடலை ஆகியவற்றை பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இரைதேடியும், தண்ணீருக்காகவும் காட்டுப்பகுதியிலிருந்து மான்கள் வருகின்றன. தோட்டப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள பொருட்களுக்கு தோட்டத்து (போர்வெல்) ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வாய்கால் வரப்பு வெட்டி விடுகிறார்கள்.
இதையறிந்து அப்பகுதிக்கு வரும் மான்கள் பயிரிட்டுள்ள, தட்டக்காய், மக்காச்சோளம், ஆகியவற்றை கடித்து சாப்பிடுகின்றன. பூச்செடிகள், வாழைகளை கடித்து சேதப்படுத்தி விடுகிறது. விவசாயிகள் பகல் நேரம் மட்டுமே விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்கமுடிகிறது.
பிடிக்க வேண்டும்
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
எங்கள் பகுதி சேவூர் குளத்தோரம் உள்ள வயக்காடுபகுதியாகும். இங்கு தினசரி 10-க்கும் மேற்பட்ட மான்கள் நள்ளிரவு நேரங்களில் தண்ணீருக்காகவும், இரை தேடியும் வருகின்றன. அப்போது நாங்கள் பயிரிட்டுள்ள விவசாய விளை பொருட்களை தின்றும், அழித்தும் விடுகிறது. எதை பயிரிட்டாலும் அதை தின்று அழித்து விடுகிறது. பகல் நேரம் மட்டுமே எங்களால் பயிர்களை பாதுகாக்க முடிகிறது. இரவு நேரங்களில் எப்போது வரும் என தெரியாமல் பயிர்களை பாதுகாக்க முடியவில்லை. இது மட்டுமல்லாது இரவு நேரங்களில் டார்ச் லைட் அடித்து பார்த்தால் மானின் இரு கண்கள் மட்டுமே பிரகாசமாக தெரியும், அதன் உடல் தெரியாது. 10-க்கும் மேற்பட்ட மான்கள் சுற்றுவதால் அதன் 20 கண்கள் மட்டுமே தெரிவதால் எங்கள் குழந்தைகள் இரவு நேரங்களில் வெளியே வருவதற்கு பயப்படுகிறார்கள். எனவே வனத்துறையினர் உடனடியாக வாழ்வாதாரமாக விளங்கும் விவசாய விளை பொருட்களை பாதுகாக்க மான்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story