திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்- 30 பேர் காயம்
திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர்
மஞ்சுவிரட்டு
திருப்பத்தூர் அருகே நெடுமரம் புதூரில் வெள்ளாளகருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 11 மணியளவில் தொழுவில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டது. இதில் 180 காளைகள் பங்கேற்றன.
முன்னதாக கோட்டாட்சியர் பிரபாகரன் உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்களும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு ஆத்மநாபன், திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேசன், துணை தாசில்தார் செல்லமுத்து, கோவில் விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர். முன்னதாக விலங்குகள் நலவாரிய மேற்பார்வையாளர் மிட்டல் மஞ்சுவிரட்டு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார். இதில் 46 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை பிடித்தனர்.
30 பேர் காயம்
இதற்கிடையில், சிவகங்கை மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள பல ஊர்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் அலங்கரித்து மாலை, துண்டு கட்டி கொண்டுவந்து கண்மாய் பகுதி, வயல்காட்டுப் பொட்டல் உள்ளிட்ட இடங்களில் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டது. இதை அப்பகுதியில் கூடியிருந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடித்தனர். இதில் மாடுகள் முட்டியதில் 30 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு பொட்டலில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த என்.புதூரைச்சேர்ந்த மாணிக்கம் (வயது 75), மேலூர் தெற்கு தெருவைச்சேர்ந்த கணேஷ் (20), மத்தினியைச் சேர்ந்த வெள்ளைக்கண்ணு (50), முத்துப்பட்டியைச் சேர்ந்த சுப்பையா (55), சாத்தனூரைச் சேர்ந்த ராஜா என்ற ராஜ்குமார் (35) ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மஞ்சுவிரட்டை காண பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பெண்கள் உள்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காயம்
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் வெங்கடசாமி (52) நேற்று என்.புதூரில் நடந்த மஞ்சுவிரட்டிற்கு பணிக்காக வந்து உள்ளார். அப்போது நடந்த கட்டுமாடு மஞ்சுவிரட்டில் எதிர்பாராதவிதமாக மாடுமுட்டியதில் வெங்கடசாமிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story