மயிலாடுதுறை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா


மயிலாடுதுறை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா
x
தினத்தந்தி 11 March 2022 11:47 PM IST (Updated: 11 March 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்காததை கண்டித்து மயிலாடுதுறை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:
சம்பளம் வழங்காததை கண்டித்து மயிலாடுதுறை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகரில் தூய்மை பணிகளை மேற்கொள்ள 100-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.340 வழங்கப்படும் நிலையில், அதில் ரூ.10 சேமநல நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் பிப்ரவரி மாத சம்பளம் அவர்களுக்கு தற்போது வரை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து மயிலாடுதுறை நகராட்சி வரதாச்சாரியார் பூங்காவில் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகவேல், துணைச் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷங்கள்
போராட்டத்தின் போது நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். சம்பள பில் வழங்க வேண்டும். பி.எப். பிடிமானம் செய்யப்பட்டதற்கான கணக்கு தர வேண்டும். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் நேற்று காலை தொடங்கி மதியம் வரை நடந்தது.

Next Story