மணிக்கூண்டில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இயங்கும் கடிகாரம்


மணிக்கூண்டில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இயங்கும் கடிகாரம்
x
தினத்தந்தி 11 March 2022 11:57 PM IST (Updated: 11 March 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் பாரம்பரிய அடையாள சின்னமாக விளங்கும் மணிக்கூண்டில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கடிகாரம் இயங்குகிறது.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் பாரம்பரிய அடையாள சின்னமாக விளங்கும் மணிக்கூண்டில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கடிகாரம் இயங்குகிறது. 
வெற்றியின் சின்னம் மணிக்கூண்டு
மயிலாடுதுறை கடைவீதியில் நடு நாயகமாக விளங்கும் மணிக்கூண்டு 1943-ம் ஆண்டு கட்டப்பட்டு, அப்போதைய சென்னை மாநில ஆளுனர் ஹோப் என்ற வெள்ளைக்காரரால் திறந்து வைக்கப்பட்டது.
உலக போரில் இங்கிலாந்து தொடர்ந்து தோல்வி அடைந்தது. போர் நடந்த எல்லா இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதன் முறையாக டுனீசியாவில் நடந்த போரில் ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் நினைவு சின்னமாக மயிலாடுதுறை மணிக்கூண்டை அப்துல்காதர் என்பவர் கட்டினார். அதன்பின்னர் மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களின் ஓன்றாக இந்த மணிக்கூண்டு மாறிவிட்டது. அந்த காலத்தில் இந்த மணிக்கூட்டில் உள்ள கடிகாரத்தை பார்த்தே மக்கள் நேரத்தை தெரிந்து கொண்டனர். 
6 ஆண்டுகளுக்கு பிறகு கடிகாரம் இயக்கம்
இதில் உள்ள கடிகாரம் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் இருந்தது. இதுதொடர்பாக பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அந்த பகுதி 16-வது வார்டு தி.மு.க. நகரசபை உறுப்பினரான 23 வயது பட்டதாரி இளைஞரான சர்வோதயன், தனது சொந்த செலவில் மணிக்கூட்டில் உள்ள கடிகாரத்தையும், மணிக்கூண்டில் பல ஆண்டுகளாக எரியாமல் இருந்த மின் விளக்கையும் சரி செய்து கொடுத்துள்ளார். தற்போது கடிகாரம் நன்கு இயங்குகிறது. மின் விளக்கும் நன்கு எரிகிறது. 16-வது வார்டு நகரசபை உறுப்பினரின் இந்த செயலை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story