ரூ.489 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது


ரூ.489 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 12 March 2022 12:19 AM IST (Updated: 12 March 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

ரூ.489 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது

திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில்  9,658 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு  ரூ.489 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறினார். 
இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
சுய உதவிக்குழுக்கள்
தமிழக முதல்-அமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு  திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். பெண்கள் யாருடைய ஆதரவை எதிர்பார்க்காமல் சொந்தக்காலில் நின்று அவர்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு அடித்தளம் அமைக்கக்கூடிய திட்டம் தான் மகளிர் சுய உதவிக்குழுத்திட்டமாகும்.  தனி மனிதர்களாக இல்லாமல் ஒரு குழுவாக வாழும் போது ஒரு பெண்கள் தன்னம்பிக்கை பெறுகிறார்கள். தன்னம்பிக்கையை மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் உருவாக்குகிறது. இந்தத் திட்டத்தின் மகுடமாக இருப்பது சுழல் நிதி, இந்த சுழல் நிதி பெண்கள் பொருளாதாரத்தின் தலைநிமிர்ந்து நிற்க தூண்டுதலாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது.
வங்கி கடன்
மகளிர் சுய உதவிக்குழுக்களில் மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நேரடி வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் தயாரிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வட்டார அளவிலான கூட்டமைப்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு கூட்டுறவு வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.489 கோடி
இதன்அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 11ஆயிரத்து18 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 1லட்சத்து 32ஆயிரத்து 216 பெண்கள் மகளிர் குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர். இதில் 9,658 மகளிர் சுய உதவி குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்த நிதியாண்டில் ரூ.489 கோடி நேரடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story