இலங்கை மீனவர்கள் 5 பேர், ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்து கைதான இலங்கை மீனவர்கள் 5 பேர், ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ராமநாதபுரம்,
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்து கைதான இலங்கை மீனவர்கள் 5 பேர், ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
இந்திய கடலோர காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்கு சொந்தமான வஜ்ரா ரோந்து கப்பல், தூத்துக்குடியில் இருந்து 120 கடல் மைல் தொலைவில் கடந்த 8-ந் தேதி காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த ஒரு விசைப்படகினை எச்சரித்தபோதும் திரும்பி செல்லாமல் தொடர்ந்து மீன்பிடித்து கொண்டிருந்ததால் அந்த படகினை மடக்கி பிடித்தது.
அதில் 5 இலங்கை மீனவர்கள் இருந்தனர். அவர்களை, இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்து, படகினை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இலங்கை நெகம்போ முன்னக்கரை பகுதியை சேர்ந்த யுவன் பிரான்ஸ் சுனில் (வயது55), சிலாபம் பகுதியை சேர்ந்த கின்ஸ்லி பெர்னாண்டோ (41), ஜுட் சம்பத் பெர்னான்டோ (41), வட்டக்களிய சிலாவ் பகுதியை சேர்ந்த ஆண்டன் பெர்னான்டோ (41), ரணில் இந்திக அன்றாடி (36) ஆகியோர் என்பது தெரிந்தது.
ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்
இதனை தொடர்ந்து 5 பேரையும் கடலோர காவல்படையினர் தூத்துக்குடி தருவைக்குளம் போலீசில் ஒப்படைத்தனர். தீவிர விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு இலங்கை மீனவர்கள் 5 பேரும் நேற்று காலை ராமநாதபுரம் தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு, பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிபதி கவிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மேற்கண்ட 5 மீனவர்களையும் வருகிற 25-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்த 5 மீனவர்களும் பலத்த பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story