காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை


காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 March 2022 1:02 AM IST (Updated: 12 March 2022 1:02 AM IST)
t-max-icont-min-icon

தமிழக வேளாண்துறை பட்ஜெட்டில் காவிரி-குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ராமநாதபுரம், 

தமிழக வேளாண்துறை பட்ஜெட்டில் காவிரி-குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கருத்து கேட்பு கூட்டம்

தமிழக அரசின் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்க உள்ளது. இதில் வேளாண்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் வேளாண்துறை உயர் அதிகாரிகள் மாவட்ட வாரியாக காணொலி காட்சி வாயிலாக விவசாயிகளின் கோரிக்கைகள், கருத்துகளை கேட்டறிந்தனர். 
இதன்படி ராமநாதபுரத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர். இதில் விவசாயிகள் தெரிவித்ததாவது:- 
சேமிப்பு கிடங்கு வசதி
 ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1.37 லட்சம் எக்டேரில் நெல்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சுமார் 18 ஆயிரம் டன் நெல் அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 14 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் போதுமான சேமிப்பு கிடங்கு வசதி இல்லாமல் மழையில் நனைந்து வீணாவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நெல் மூடைகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க சேமிப்பு கிடங்கு வசதிகளை அதிகரிக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கூத்தன் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மராமத்து செய்ய வேண்டும். 

நிதி ஒதுக்கீடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் எக்டேரில் செய்து வந்த மிளகாய் விவசாயம் இன்றைய நிலையில் குறைந்து கொண்டே இருக்கிறது. எனினும் 16 ஆயிரத்து 500 எக்டேரில் செய்யப்படும் குண்டுமிளகாய் மகசூலை நேரடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும். காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாக நெல் ஆதார விலையை உயர்த்தி தர வேண்டும். 65 வயதான விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வு ஊதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

Next Story