கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியாகினர்
மதுரை,
மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியாகினர்.
கல்லூரி மாணவர்
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் இன்பராஜ். இவருடைய நண்பர் பரத்ரிஷி. நேற்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் விக்கிரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சோழவந்தான் அருகே நாராயணபுரம் விக்கிரமங்கலம் ரோட்டில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மோதியது.
இந்த விபத்தில் இன்பராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், பரத்ரிஷி படுகாயத்துடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காடுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் சாவு
திருமங்கலம்-சோழவந்தான் சாலை பகுதியை சேர்ந்தவர் பால்சாமி. இவருடைய மனைவி மருதாயி (வயது 54). இவர் சம்பவத்தன்று தன்னுடைய மகள் கவிதாவுடன் இருசக்கர வாகனத்தில் அரசபட்டி கிராமத்தில் உள்ள தன்னுடைய குல தெய்வம் கோவிலுக்கு சென்றார். கவிதா இருசக்கர வாகனத்தை ஓட்டினார். மருதாயி பின்னால் அமர்ந்திருந்தார்.
அரசபட்டி அருகே சென்றபோது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து. இதில் பலத்த காயமடைந்த மருதாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மருந்து வாங்க சென்றவர்
வாடிப்பட்டி பொட்டுலுப்பட்டி பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யர் (67). இவரது மகள் ஈஸ்வரி (38). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரி தனது தாய்க்கு மாத்திரை வாங்குவதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எல்.புதுரை சேர்ந்த கோபிநாத் (23) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.
இதில் ஈஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டு வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உமாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கால் முறிவு
சோழவந்தான் அருகே முத்துலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துக்கழுவன் மகன் சந்தோஷ் (19). இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் மோட்டார்சைக்கிளில் கரட்டுப்பட்டி கிராமத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சந்தோஷ் மீது மினி வேன் மோதியதில் இடது காலில் எலும்பு முறிந்தது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் பிச்சைமணியை (52) கைது செய்தனர்.
விசாரணை
சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தை சேர்ந்த வெள்ளிமலை (55), இவரது மனைவி பாண்டியம்மாள் (50) ஆகிய இருவரும் நேற்று மாலை மொபட்டில் சென்றனர். அதே போல சமயநல்லூர் ரவிக்குமார்(25), சோழவந்தான் பிரசாந்த் ஆகிய இருவரும் மோட்டர்சைக்கிளில் எதிரே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளும், மொபட்டும் மோதியது. இதில் வெள்ளிமலை, பாண்டியம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ரவிக்குமார், பிரசாந்த் ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர். இதுகுறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story