சாப்டூர் வனப்பகுதியில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி
சாப்டூர் வனப்பகுதியில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்தது
பேரையூர்,
பேரையூர் தாலுகாவில் உள்ள சாப்டூர் வனப்பகுதியில், வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 6 நாட்களாக நடைபெற்றது. இந்த பணியில் 27 வன ஊழியர்கள் ஈடுபட்டனர். இவர்கள் புலிகள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் பிற வன விலங்குகள் குறித்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியின் போது, வனப்பகுதியில் புலிகள் மற்றும் சிறுத்தைகள் எச்சம், அவற்றின் கால்தடம், அவற்றை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பீட் நம்பர் 9 என்ற பகுதியில் எம்மாபுரம் காவு என்ற பகுதியில் புலி நடமாட்டம் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கம்பத்து மொட்டை, சங்கிலி பாறை, திருக்கல் மொட்டை, கச்சைகட்டி, கோட்டைமலை, சின்ன வாலி, பெரியவாலி, பெரிய கோட்டை மலை ஆகிய மலைப்பகுதி உச்சியில் அதிகளவு வரையாடுகள் காணப்பட்டது.
மேலும் கரடி, காட்டுமாடு, மிளா, மான் ஆகிய வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சாப்டூர் வனத்துறை அதிகாரி செல்லமணி கூறியதாவது, சாப்டூர் வனப்பகுதியில் கடந்த சில வருடங்களாக சிறுத்தை, வரையாடுகள், மான், ஆகியவற்றின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வருகிறது.
புற்கள், செடிகள், அதிக அளவில் உள்ள இடங்களில் யானை, காட்டு மாடுகள், மான், நடமாட்டம் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் மரங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. புலிகள் குறித்த துல்லியமாக கணக்கெடுப்புக்கு 70 தானியங்கி கேமராக்கள் வனப்பகுதியில் பொருத்தப்பட உள்ளது.
இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story