தஞ்சை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலருக்கு நோட்டீசு


தஞ்சை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலருக்கு நோட்டீசு
x
தினத்தந்தி 12 March 2022 1:48 AM IST (Updated: 12 March 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

வேட்புமனுவில் தம்பியின் ஒப்பந்த பணியை மறைத்ததாக தஞ்சை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலருக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

தஞ்சாவூர்:
வேட்புமனுவில் தம்பியின் ஒப்பந்த பணியை மறைத்ததாக தஞ்சை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலருக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நோட்டீசு அனுப்பி உள்ளார்.
தி.மு.க. கவுன்சிலர்
தஞ்சை மாநகராட்சி 16-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலராக இருப்பவர் அண்ணா.பிரகாஷ். கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடக்கூடியவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது அவரது ரத்த சொந்தங்களோ அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்திருக்ககூடாது. 
மாநகராட்சி மூலமாக வருமானம் ஈட்டக்கூடிய எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்பது தேர்தல் விதிமுறையாகும்.
நோட்டீஸ்
ஆனால் கவுன்சிலர் அண்ணா.பிரகாஷின் உடன்பிறந்த தம்பி ராம்பிரசாத், அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். 
இதை அண்ணா.பிரகாஷ் மறைத்து வேட்புமனு தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதாக கூறி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டவரும், மாநகராட்சி ஆணையருமான சரவணகுமார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
பரபரப்பு
அவருடைய விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் அண்ணா.பிரகாஷ் கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார் என கூறப்படுவது தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்திருக்க கூடாது. அதேபோல் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படுகின்ற கடைகளை டெண்டர் எடுத்து நடத்தக்கூடாது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இதை செய்திருக்க கூடாது. கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவரின் ரத்த சொந்தங்களும் மாநகராட்சி மூலம் வருவாய் ஈட்டக்கூடிய எந்த பணியினையும் செய்யக்கூடாது என்பது தேர்தல் விதிமுறையாகும்.
தகுதி நீக்கம் செய்யப்படலாம்
தஞ்சை மாநகரில் 16-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அண்ணா.பிரகாஷின் தம்பி ராம்பிரசாத் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தன்னுடைய வேட்புமனுவில் அதனை மறைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவரிடம் விளக்க கேட்டு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உரிய விளக்கம் அளித்தால் தேர்தல் ஆணையத்திடம் கலந்து ஆலோசனை செய்த பிறகு அவர் பதவியில் இருப்பது குறித்து அறிவிக்கப்படும். அவரது விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால் கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்றனர்.
கவுன்சிலர் கருத்து
இது தொடர்பாக கவுன்சிலர் அண்ணா.பிரகாஷ் கூறும்போது, எனது தம்பி ராம்பிரசாத் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். எனக்கு திருமணம் ஆன பிறகு என் மனைவி உள்ளிட்டவர்களை சேர்த்து தனி ரேஷன் கார்டு பெற்று வசித்து வருகிறேன். அந்த வீட்டின் ஒரு பகுதியில் எனது தம்பியும் இருக்கிறார். அவருக்கு தனி ரேஷன்கார்டு உள்ளது.
ஆனால் நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதாகவும், அதை நான் மறைத்து விட்டதாக கூறி எனது கவுன்சிலர் பதவியை பறிக்க பார்க்கின்றனர். என்னை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும் ஆணையர், வேட்பு மனு பரிசீலனையின் போதே எனது மனுவை நிராகரித்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? என்னிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கம் கொடுக்க இருக்கிறேன். மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் சட்டப்படி சந்தித்து இதனை முறியடிப்பேன் என்றார்.

Next Story