நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு


நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
x
தினத்தந்தி 12 March 2022 2:03 AM IST (Updated: 12 March 2022 2:03 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமங்கலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கீழநத்தம், அம்பாபூர், ஆலவாய், செங்குழி, உடையவர் தீயனூர், அம்பலவர் கட்டளை போன்ற 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். அவ்வாறு விளைவித்த நெற்பயிர்களை அறுவடை செய்த பின்பு, நெல்மணிகளை விற்பனை செய்வதற்காக 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்துவாஞ்சேரி மற்றும் ஸ்ரீபுரந்தான் ஆகிய ஊர்களில் உள்ள அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று, காத்திருந்து தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்து வந்தனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக, அந்த கிராமங்களின் மைய பகுதியான விக்கிரமங்கலத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 7-ந் தேதி விக்கிரமங்கலத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் விக்கிரமங்கலத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சிகளின் பிரதிநிதிகள், விக்கிரமங்கலம் கிராம முக்கியஸ்தர்கள், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story