அதிகரிக்கும் சாலையோர ஆக்கிரமிப்புகள்
அரியலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன.
அரியலூர்:
ஆக்கிரமிப்புகள்
அரியலூர் நகரில் மார்க்கெட் தெரு, பஸ் நிலையம், அண்ணா சிலை ரவுண்டானா மற்றும் நகரின் பல இடங்களில் தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன. அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு, தற்போது சிறிய கொட்டகைகள் போடப்பட்டு வருகின்றன.
மார்க்கெட் தெருவில் அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் அருகே வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளுக்காக கொட்டகை மற்றும் பெரிய குடைகள் வைக்கப்படுவதால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, போக்குவரத்து, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று ெபாதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அகற்ற வேண்டும்
மாவட்ட தலைநகரான அரியலூரில் தாசில்தார், கோட்டாட்சியர், கருவூலம், தீயணைப்புத் துறை, சிறைத்துறை, ஊராட்சி ஒன்றியம், நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை, மாவட்ட நூலகம் போன்ற பல அலுவலகங்கள் உள்ள பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, கிராமம் போல் மாறி வரும் அரியலூர் நகரை ஒரு வளரும் நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள் ஆகும்.
Related Tags :
Next Story