பாலியல் சீண்டல் செய்ததாக மாணவி, பணி செய்ய விடாததாக கண்டக்டர் புகார்


பாலியல் சீண்டல் செய்ததாக மாணவி, பணி செய்ய விடாததாக கண்டக்டர் புகார்
x
தினத்தந்தி 12 March 2022 2:03 AM IST (Updated: 12 March 2022 2:03 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் சீண்டல் செய்ததாக மாணவி, பணி செய்ய விடாததாக கண்டக்டர் அளித்த புகார்களின்பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தா.பழூர்:

பஸ்சில் தகராறு
அரியலூர் மாவட்டம் தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். அரசு பஸ் கண்டக்டர். இவரது குடும்பத்திற்கும், 20 வயதுடைய ஒரு கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து அரசு பஸ்சில் அந்த மாணவி, பஸ்சில் இருந்து இறங்க சிறிது தாமதம் ஆனதாகவும், இதனால் அந்த பஸ்சில் கண்டக்டராக இருந்த தியாகராஜன், மாணவியை ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த பஸ்சில் வந்த மாணவிகள், கண்டக்டர் தியாகராஜனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து டிரைவர், கண்டக்டர் மற்றும் மாணவிகள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர். அவர்களை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சமரசம் செய்து, சம்பவம் நடந்த இடம் தா.பழூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டு உள்ளதால் அங்கு புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.
5 பேர் மீது வழக்கு
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், தியாகராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அப்போது போலீசில் புகார் அளிக்க முயன்றபோது, தன்னிடமும், தனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், இந்நிலையில் கடந்த 8-ந் தேதி பஸ்சில் வந்த தன்னை, தியாகராஜன் பாலியல் சீண்டல் செய்ததாகவும், கூறியிருந்தார்.
இதேபோல் கண்டக்டர் தியாகராஜன், தன்னை அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக மாணவி மற்றும் மாணவியின் உறவினர்களான கஸ்தூரி, அரவிந்த், சுவேதா ஆகியோர் மீது தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் தியாகராஜன் மீதும், தியாகராஜன் கொடுத்த புகாரின்பேரில் அந்த மாணவி மற்றும் சுவேதா, கஸ்தூரி, அரவிந்த் ஆகியோர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story