பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு; 3 பணியாளர்கள் பணியிடை நீக்கம்


பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு; 3 பணியாளர்கள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 12 March 2022 2:04 AM IST (Updated: 12 March 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு தொடர்பாக 3 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அரியலூர்:
அரியலூரில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர். இப்பகுதியில் சுமார் 100 கிராமங்களில் பால் கொள்முதல் செய்யப்பட்டு தினமும் 13 ஆயிரம் லிட்டர் கூட்டுறவு ஒன்றியத்திற்கும், 7 ஆயிரம் லிட்டர் நகரில் சில்லரை வியாபாரமும் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லாபத்தில் இயங்கி வரும் இந்த சங்கத்தில் பல ஆண்டுகளாக சில முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் என புகார் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அரியலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க துணை பதிவாளர் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள், அந்த கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு பல முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து சங்க செயலாளர் இளங்கோவன், கணக்காளர் ஆனந்தன், உதவியாளர் சேகர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இந்த சங்கத்திற்கு, செந்துறை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் கொளஞ்சிநாதன் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சங்க செயல்பாடுகள் பற்றி முன்னாள் இயக்குனர் ஒருவர் கூறுகையில், சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் இந்த சங்கம் நல்ல முறையில் செயல்பட்டு தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. விவசாயிகள் சங்கத்தில் கடன் வாங்கி மழையிலும், வெயிலிலும் மாடுகளை மேய்த்து பால் கறந்து சங்கத்திற்கு கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் போனஸ் தொகை, ஊக்கத் தொகை வழங்குவதில் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்துள்ளனர். சங்கம் பல கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி இருக்கும். ஆனால் ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதால் சங்கம் லாபம் அடைந்ததை விட, அவர்கள் பல வழிகளில் லாபம் அடைந்து, விவசாயிகளை விட வசதி வாய்ப்பாக இருந்து வருகின்றனர், என்று கூறினார்.

Next Story