தி.மு.க. போட்டி வேட்பாளர் தலைவராக தேர்வு: குளச்சல் நகராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
தி.மு.க. போட்டி வேட்பாளர் தலைவராக தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் குளச்சல் நகராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குளச்சல்,
தி.மு.க. போட்டி வேட்பாளர் தலைவராக தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் குளச்சல் நகராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குளச்சல் நகராட்சியில் 11-வது வார்டில் தி.மு.க. சார்பில் நசீரும், 22-வது வார்டில் தி.மு.க. சார்பில் ஜாண்சனும் போட்டியிட்டு வெற்றிப்பெற்றனர். இதையடுத்து தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக ஜாண்சன் அறிவிக்கப்பட்டார். ஜாண்சன் தலைவர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்தார்.
இவரை எதிர்த்து நசீரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்தார். வாக்குப்பதிவு முடிவில் இருவரும் தலா 12 வாக்குகள் பெற்றனர். சம வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் நசீர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.
கூட்டணி தர்மம் மீறல்
அவர் பா.ஜனதா கவுன்சிலர்கள் ஆதரவுடன் தலைவராக வெற்றி பெற்றதாகவும், காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூட்டணி தர்மத்தை மீறியதாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்தநிலையில் நேற்று கூட்டணி தர்மத்தை மீறியதாகவும், பிரின்ஸ் எம்.எல்.ஏ.வை கண்டித்தும், நகராட்சி தலைவர் நசீர் பதவி விலக வலியுறுத்தியும் குளச்சல் பீச் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குளச்சல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மரிய ரூபன் தலைமை தாங்கினார். முன்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண், தூத்தூர் ஊராட்சி கவுன்சிலர் ஜெயராஜ், குளச்சல் லின்ஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் பிரின்ஸ் எம்.எல்.ஏ.வின் உருவ பொம்மையை எடுத்து வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப் - இன்ஸ்பெக்டர் சனல்குமார் விரைந்து சென்று தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றார். இந்த போராட்டத்தில் குளச்சல், கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story